சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆணைய வழக்கறிஞர் செவனன் மோகன் ஆகியோர், திரு.வி.க. பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனங்கல் பூங்காவில் பசுமைப் பரப்பினை இன்று (06.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள திரு.வி.க. பூங்காவினைப் பார்வையிட்டு அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினை ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இப்பூங்காவின் வெளிப்பகுதியில் உள்ள புல்லா அவென்யூ சாலையில் ரூபாய் 52.68 கோடி மதிப்பீட்டில் 1600 மீட்டர் நீளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள நேரு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பரப்பினைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு பூங்காவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆணைய வழக்கறிஞர் ஆகியோர் மரக்கன்றினை நட்டனர்.
பின்னர், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பனகல் பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டு, பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பசுமைப் பரப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இந்நிகழ்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மாநகராட்சி முதுநிலை சட்ட அலுவலர் எஸ். ஜேக்கப் ராஜன் பாபு, மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.