சென்னை
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள், அண்ணாநகர் மண்டலத்தில் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் உணவுத் திட்ட செயல்பாடுகளை இன்று (10.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையாளர் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-130, ஆற்காடு சாலையின் இருபுறமும் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்னரே முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலம், வார்டு-102, செனாய் நகர் கிரசன்ட் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்துப் பார்வையிட்டு, பொதுமக்கள் பூங்காவினைப் பயன்படுத்தும் வகையில் நடைபயிற்சி, இருக்கைகள், பசுமைப் பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு பூங்காவினை தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள செயற்கை புல் தரை விளையாட்டுத் திடலைப் பார்வையிட்டு, தினசரி பயன்படுத்தும் பயனாளிகள் விவரம், பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு, உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் உபகரணங்களை முறையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் 102வது வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் செயல்பாட்டினைப் பார்வையிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை குறித்த நேரத்தில் வழங்கிடவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டல அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.