சென்னை,
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று ஏற்றுக் கொண்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
26.10.2026 முதல் 01.11.2026 வரை கடைப்பிடிக்கப்படும், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு, இன்று (26.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டட வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு, மத்தியம், தெற்கு வட்டார அலுவலகங்கள், 1 முதல் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) கௌசல்யா, விழிப்பு அலுவலர் ஜெகதீஸ்வரன், முதுநிலை சட்ட அலுவலர் ஜேக்கப் ராஜன் பாபு, நிதி ஆலோசகர் பி.மோகன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
· அனைத்து செயல்களிலும் நேர்மையாகவும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்;
·லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்;
· அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்;
· பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் ;
· தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்;
· ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.