மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை ஆங்காங்கே வீசி எறிவதால் வனவிலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கில், மலைப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த தொகையை மீண்டும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அப்போது நீதிபதிகள், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் விவரம் ரசீதில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், இந்த தொகையை வசூலிப்பது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவதற்கான அனுமதியாக கருதப்படக் கூடாது என்றும் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த அரசு எந்தவித ஊழலையும் ஒருபோதும் அனுமதிக்காது” என்று விளக்கம் அளித்தார்.
விசாரணையின் முடிவில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான முழுமையான அறிக்கையை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.