தமிழக செய்திகள்

வீட்டில் பதுக்கிய நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்: வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய நாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகளை உரிமம் இன்றி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து நிரப்பப்பட்ட தோட்டாக்களை பறிமுதல் செய்து, வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் சோதனை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையாபாண்டியன் (வயது 40). இவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை உரிமம் இன்றி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் போலீசார் சண்முகையாபாண்டியனின் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

அப்போது வீட்டில் ஒரு அறையில் உரிமம் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி, சுமார் 1 3/4 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்ட 5 தோட்டாக்கள் மற்றும் வெடி மருந்து நிரப்பப்படாத 42 தோட்டாக்கள், துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள், வெடிமருந்து தொடர்பான உபகரணங்கள், டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதிரடி கைது

வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சண்முகையாபாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு வெடிமருந்து வினியோகம் செய்த சிவகிரி தாலுகா தாருகாபுரத்தை சேர்ந்த நாகேந்திரன்(எ) குட்டி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். கைதான சண்முகையாபாண்டியன் மீது வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடியதாக கடையநல்லூர் வனத்துறையில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT