தமிழக செய்திகள்

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி - தம்பதி கைது

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பேபி (38 வயது). இவர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ரூ.36 லட்சம் மோசடி

வினோத்பாபு என்பவர் தன்னை குடிசை மாற்று வாரிய ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ரூ.3 லட்சம் கொடுத்தால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறினார். அதை நம்பி ரூ.3 லட்சம் கொடுத்ததுடன், எனது தாயார் மற்றும் தெரிந்தவர்களையும் அறிமுகப்படுத்தினேன். இவ்வாறு 13 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்தை வினோத்பாபு பெற்றுக்கொண்டார்.

பின்னர் வினோத்பாபு எங்களுக்கு வழங்கிய குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் மின்சார அட்டை நகல்களை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் சரிபார்த்தபோது, அவை போலியான ஆவணங்கள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

தம்பதி கைது

இதுகுறித்து போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த வினோத்பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி உமா மகேஸ்வரி (30 வயது) ஆகியோரை எம்.கே.பி. நகரில் வைத்து கைது செய்தனர்.

விசாரணையில், வினோத்பாபு மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு மற்றும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.