தமிழக செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: தம்பதி கைது

தூத்துக்குடியில் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் கணவர் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு திரும்பிய மனைவி, அதைக் கண்டு ஆத்திரமடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தாதேவி (வயது 32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் மாரிமுத்து(43) என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மாரிமுத்துவுக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணான பிருந்தாதேவிக்கும் இடையே கடந்த சில காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் மாரிமுத்துவின் மனைவி பிரியா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், பிருந்தாதேவி மாரிமுத்துவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்ததாகத் தெரிகிறது.

எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திரும்பிய பிரியா, தனது கணவருடன் பிருந்தாதேவி நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா, பிருந்தாதேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இந்த மோதலின் உச்சக்கட்டமாக, பிரியா பிருந்தாதேவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி பிருந்தாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார், பிருந்தாதேவியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.