கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மகன்கள் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்த தம்பதி: மனைவி உயிரிழப்பு, கணவருக்கு தீவிர சிகிச்சை

மகன்கள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து இரு மகன்கள் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மகன்கள் தற்கொலை

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (55 வயது). இவரது மனைவி ஜெயலட்சுமி (51 வயது). இந்த தம்பதியருக்கு கணேஷ், விக்னேஷ் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக, 2-வது மகன் கணேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரம் நீங்குவதற்குள், அடுத்த 2 நாட்களில் மூத்த மகன் விக்னேஷும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வளர்த்த இரு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால், மோகனும் ஜெயலட்சுமியும் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தனர். மகன்களின் நினைவாகவே இருந்து வந்த தம்பதியர், தினமும் அழுது புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

விபரீத முடிவு

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி மகன்கள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மோகனும், ஜெயலட்சுமியும் வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர். வீட்டில் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவரது கணவர் மோகனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT