மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் வாணிய தெருவை சேர்ந்தவர் காமராஜ்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி வள்ளி (59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனால் காமராஜ் தனது மனைவி வள்ளியுடன் புத்தூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சென்னையில் உள்ள மகன்கள் புத்தூருக்கு வந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இரு மகன்கள் இருந்தும் தனியாக வசித்து வந்ததால் காமராஜூம், வள்ளியும் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு காமராஜூம், வள்ளியும் விஷம் குடித்துள்ளனர். தாங்கள் விஷம் குடித்தை சென்னையில் உள்ள மகன்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை புத்தூருக்கு வந்து வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தந்தை காமராஜ், தாய் வள்ளி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் வள்ளியும், மாலையில் காமராஜூம் பரிதாபமாக உயிரிழந்தனர்.