தமிழக செய்திகள்

45 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு

கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்ப சாவடியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 70). இவருடைய மனைவி சித்ரா(61). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வராஜ் சென்னையில் உள்ள ஒரு காபி தூள் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்தபோது சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து சென்றார்.

அப்போது சாலையில் கிடந்த ஆணி செல்வராஜ் காலில் குத்திவிட்டது. இதற்கு சரியான விதத்தில் சிகிச்சை அளிக்காததால் காலில் புண் புரையோடி முழங்காலுக்கு கீழே காலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளியான செல்வராஜை வேலைக்கு அனுப்ப மனம் இல்லாமல் வீட்டில் வைத்தே சித்ரா கவனித்து வந்தார்.

மாரடைப்பு

கடந்த 25 ஆண்டுகளாக வீட்டில் வைத்தே தனது கணவரை சித்ரா அன்பாக கவனித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என அறுவுறுத்தினர். இதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜுக்கு டாக்டர்கள் ஆஞ்சியோ சிகிச்சை செய்தனர். இந்த சிகிச்சை மூலம் கணவர் நன்றாக குணம் அடைந்து விடுவார் என சித்ரா அதீத நம்பிக்கையுடன் ஆஸ்பத்திரிலேயே காத்திருந்தார், ஆனால்... அவரது நம்பிக்கை அவநம்பிக்கையாகி விட்டது. சிகிச்சை முடிந்த சிறிது நேரத்தில் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா அதிர்ச்சியுடன் மிகுந்த வேதனை அடைந்தார்.

மனம் ஏற்க மறுத்தது

தனது கணவர் தன்னை தனியாக விட்டுச்சென்றதை சித்ராவின் மனம் ஏற்க மறுத்தது. தங்களது 45 ஆண்டுகால வாழ்க்கையில் தனது கணவர் தன்னை தனியாக எங்கும் விட்டுச்சென்றதே இல்லை என்பதால் அவரது இறப்பை சித்ராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தால் அங்கிருப்பவர்களுடன் பேசும்போது அவரது அதிர்ச்சியும். மனக்கவலையும் குறையும் என கருதிய உறவினர்கள், சித்ராவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற பிறகும் அவர் அதே மனகவலையில் இருந்ததால் திடீரென சித்ரா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சித்ரா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறப்பிலும் பிரிய மனமில்லாமல்

இதையடுத்து சித்ரா உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். அதேபோல் இயற்கையாக இறந்ததால் செல்வராஜ் உடலும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அருகருகே செல்வராஜ், சித்ரா உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சித்ராவுக்கு செல்வராஜ் தாய் மாமன் முறையாகும். இவர்கள் 2 பேருக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 45 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர்கள் இறப்பிலும் பிரிய மனமில்லாமல் சேர்ந்தே இறந்து விட்டனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்ததால் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.