சென்னை,
போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேசை, நவம்பர் 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், அன்பில் மகேஷை கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அன்பில் மகேசிடம் முதல் நாளில் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
2-வது நாளான நேற்று விசாரணை தீவிரமடைந்தது. பெண் தொழில் அதிபரும் ஆடை வடிவமைப்பாளருமான சண்முகப்பிரியா வீட்டில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் அன்பில் மகேசிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த முறைகேட்டில் பெறப்பட்ட பணம் பல்வேறு நபகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதா? அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர்.
அன்பில் மகேசின் மனைவி ஜனனியிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே, அன்பில் மகேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சில முக்கிய நபர்கள் இந்த வழக்கில் சிக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் இன்று 3-வது நாளாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்தநிலையில், அன்பில் மகேஷை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் நவம்பர் 6-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அன்பில் மகேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதனிடையே போலீஸ் காவலில் உணவு முறையாக வழங்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பியநிலையில், “உணவு அளிக்கப்பட்டது, போலீஸ் காவலில் தன்னை உடல் ரீதியாகவோ, மனதளவிலோ துன்புறுத்தவில்லை என அன்பில் மகேஷ் பதில் அளித்ததார்.