தமிழக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்தது - 50 சதவீத வர்த்தகம் பாதிப்பு

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். சந்தைக்கு கோவை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து பெரும்பாலும் கேரளத்துக்கு மாடுகள் இறைச்சி தேவைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதை தவிர உள்ளூர் விவசாயிகளும் விவசாய தேவைக்கு மாடுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் வருகிற 3-ந்தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புனித வெள்ளியையொட்டி மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் விற்பனையும் அதிகரித்தது.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு வரும் வியாபாரிகளிடம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் மாடுகள் விற்பனை குறைந்ததோடு. வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த ஆண்டு புனித வெள்ளி பண்டிகையின் போது 4 ஆயிரத்து 500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வர்த்தகமும் ரூ.10 கோடி வரை நடந்தது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வியாபாரிகள் பணம் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் மாடுகள் வரத்து குறைந்து, 3 ஆயிரம் மாடுகள் தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் வர்த்தகம் ரூ.5 கோடிக்கு தான் நடைபெற்றது. நாட்டு பசு ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு காளை ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், செர்சி ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், எக்சப் ரக பசு ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், மொரா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரையும், மொராவில் இனப் பெருக்க ரக காளை ஒரு ஜோடி ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

மேலும் எக்சப் ரக மாடுகள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும். இதில் இனப்பெருக்க ரக காளை மாடு அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இந்த மாடு 900 கிலோ எடை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.