தமிழக செய்திகள்

தனியார் பேருந்துகளில் தன்னிச்சையான கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கட்டணம் உயர்வு

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

உதாரணத்திற்கு, ரூ.10/-ஆக இருந்த கட்டணம் ரூ.15/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப்போக்குவரத்தில் இந்த திடீர் கட்டண உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் செலவினத்தை மேலும் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

உரிய நடவடிக்கை..

அரசின் உத்தரவின்றி பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதமாகும். ஆனால், இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும், காணாமலும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் தலையிட்டு தனியார் பேருந்து நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.