சென்னை,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் இன்று சென்னை கிண்டி சிட்கோ அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்தும், ஒவ்வொரு திட்டத்திற்கான இலக்கினை அடைவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஆண்டினை விட அதிக அளவில் பயனாளிகளை கண்டறிந்து தொழில் முனைவோர்களை உருவாக்குவது நமது சாதனையாக இருக்க வேண்டும் எனவும் மேலும், அதிக அளவில் விழிப்புணர்வு கூட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும், மகளிர், ஆதீதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போது உள்ள திட்டங்களின் வாயிலாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், குறுத்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக அதிகபடியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது நமது அரசினுடைய சாதனையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களின் இலக்கினை எய்திடும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தி தொடங்கிட வழிவகை செய்திட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல. நிர்மல்ராஜ், இன்ட்கோசர்வ் நிர்வாக இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.