தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மின் உற்பத்தியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதன் மூலமாக பசுமை மின்சார உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும்.

சென்னை,

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், தூய்மையான, நேர்மையான, புதுமையான மற்றும் மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற அரசின் உயரிய நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் எளிமையான சேவைகளை வழங்கவும் முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிசக்தி மண்டலங்கள்

அதன் ஒரு பகுதியாக, காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NCES) வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடங்களாகக் கொண்டு ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அரசின் பசுமை ஆற்றல் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தனித்திட்ட அமலாக்கம்

சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும், திருச்சி மண்டலத்தில் திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும், திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி மின்பகிர்மான மண்டலம், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயம்புத்தூர் மின்பகிர்மான மண்டலம் மற்றும் மதுரை மண்டலத்தில் கரூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும் உள்ள காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் செயல்படுத்தும் பணிகளை இனிவரும் காலங்களில் உதவி செயற்பொறியாளர்களின் தலைமையில் மேற்கொள்ளும். மேற்கண்ட 5 எரிசக்தி மண்டலங்களின் எரிசக்தி திட்ட செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித்திட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பிற்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு

இந்த மறுசீரமைப்பு மூலம் நிர்வாகப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படுவதோடு, புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், மறுதிறன் மேம்பாடு (Repowering), தொழில்நுட்ப ஆய்வு, மின்உற்பத்தி வெளியேற்ற (Evacuation) தேவையான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, திட்ட கண்காணிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்ற பணிகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும்.

மேலும், மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டம் (BESS), பிரதம மந்திரி குசும் 2.0, (PM-KUSUM 2.) பிரதம மந்திரி மேற்கூரை சோலார் பிரிவு,(PM-Rooftop Solar) மாதிரி சூரியசக்தி கிராமம், அரசு கட்டிடங்களில் சூரியசக்தி வசதி அமைத்தல் மற்றும் வரவிருக்கும் மிதக்கும் சூரியசக்தி திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த களப்பணியாளர்கள் குழுவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பசுமை மின்சார உற்பத்தி

இந்த நிர்வாக மறுசீரமைப்பின் மூலம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயனாக காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் காலம் குறைக்கப்பட்டு, திட்ட செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மின் உற்பத்தியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதன் மூலமாக பசுமை மின்சார உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும்.

தமிழ்நாடு அரசு 2030-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் நிலையில், இந்த நிர்வாக மறுசீரமைப்பு அதற்கான முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையாக அமையும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.