காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணு உத்தரவின் பேரில் கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர் ஒருவர் நகை கட னுக்காக செலுத்திய ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 419 கடன் தொகை சங்கத்தின் கணக்கில் வரவு வைக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டதில் கூட்டுறவு கடன் சங்கத்தின் பொறுப்பு செயலாளராகவும் எழுத்தராகவும் லட்சுமி சுயலாபத்திற்காக சங்கத்தின் ரொக்க கையிருப்பை குறைத்து காட்டி வாடிக்கையாளர் செலுத்திய ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்து 149 பணத்தை கையாடல் செய்துள்ளது கண்டறியப்பட்டது. சங்கத்தின் பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு குழுவினர் பரிந்துரை செய்தனர். இதை தொடர்ந்து சங்க செயலாட்சியர் களியாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தர் லட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.