சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம். 2021-ல் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025-ல் இது 1,461 ஆக குறைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. 2021-ல் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. 2025-ல் இது 401 ஆக குறைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன. கோவில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் தடுக்கப்பட்டுள்ளன.
எந்த வகையிலும் காவல்நிலைய மரணங்களை ஏற்க முடியாது. சிவகங்கை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை அனைவரும் அறிவார்கள். சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீசார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் குறைந்துள்ளன. 2021-ம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024-ம் ஆண்டு 11,000 வழக்குகளாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் தடுப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியதாலேயே இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு போதைப்பொருட்கள் காரணமா என விவாதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.