சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தூயசக்தியா அல்லது தூங்கும் சக்தியா?
திமுக எனும் தீயசக்திக்கு மாற்றான தூயசக்தி நாங்கள் தான் என்று கூறிய ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்ற 13 நாட்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடியிசம், வன்முறை என கிட்டதட்ட 30- க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதை தினசரி செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
முந்தைய திமுக ஆட்சியில் தான் மக்கள் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள் என்று பார்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் ஊசலாடி கொண்டிருக்கிறது. அதுசரி, திருடன் கையில் சாவி கொடுத்ததை போல, குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும்? அரசை கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்?
ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, வித விதமான விளம்பர பரப்புரைகளிலேயே முதல்-அமைச்சர் கவனம் செலுத்தி கொண்டிருப்பது அவரது அனுபவமற்ற ஆளுமையை தான் காட்டுகிறது.
அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம் ஆனால் சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் எப்போதுதான் உணர்வார்?
இவ்வாறு அதில் கூறினார்.