சென்னை,
தமிழ்நாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நேற்று கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வர்கள் இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குற்றப்பின்னணியை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்.) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்.எல்.ஏ.க்களில் 126 பேர் மீது அதாவது 54 சதவீதத்தினர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் வழக்குகளில சிக்கி உள்ளனர். தி.மு.க.வின் 59 பேரில் 37 பேர், அ.தி.மு.க.வின் 47 பேரில் 33 பேர், காங்கிரசின் 5-ல் 3 பேர், பாட்டாளி மக்கள் கட்சியில் வெற்றி பெற்ற 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் வெற்றி பெற்ற தலா 2 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்டு, இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் தலா ஒருவர். அ.ம.மு.க., தே.மு.தி.க. கட்சிகளில் வெற்றி பெற்ற இருவர் மீதும் வழக்குகள் இருப்பதாக தங்கள் பிரமாண பத்திரங்களில் தெரிவித்து உள்ளனர். இதல் 56 பேர் (24 சதவீதம்) மீது கடுமையான குற்ற வழக்கு கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அந்தவகையில் த.வெ.க.வின் 19 பேர், தி.மு.க.வின் 14 பேர், அ.தி.மு.க.வின் 14 பேர், காங்கிரசை சேர்ந்த 2 பேரும் கடுமையான வழக்கை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது கொலை வழக்கு. 6 பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு, 2 பேருக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ.க்களில் 193 பேர் (83 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் அ.தி.மு.க.வின் லால்குடி எம்.எல்.ஏ.வான லீமா ரோஸ் மார்ட்டின் ரூ.5,863 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.