தமிழக செய்திகள்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முதலை.. ஆக்ரோஷமாக குரைத்து விரட்டிய நாய்கள் - சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

முதலை புகுந்ததும், அதனை நாய்கள் துரத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

உடுமலைப்பேட்டை,

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முதலையை, வளர்ப்பு நாய்கள் குரைத்துக் கொண்டு விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாப்பான்குளம் பகுதியில் உள்ள நொச்சிப்பள்ளம் ஓடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த முதலை ஒன்று அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த மரகதம் என்பவரது வீட்டின் வாசலுக்குள் அந்த முதலை மெதுவாக ஊர்ந்து சென்றது.

அப்போது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இரண்டு நாய்கள், முதலை வந்ததை அறிந்து அதை விரட்டுவதற்காக ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கின. முதலையை நோக்கிப் பாய்ந்து தொடர்ந்து குரைத்ததால், முதலை மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ஓடைப் பகுதிக்குத் திரும்பியது.

வீட்டின் வாசலில் நள்ளிரவில் முதலை புகுந்ததும், அதனை நாய்கள் துரத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT