கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடுமையான பீதிக்குள்ளாகினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமத்தில் கோலவிழி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசி ஒருவரின் வீட்டில் முன்னால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் ராட்சத முதலை ஒன்று படுத்து கிடந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், அதிகாலையில் தனது வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டு வாசலில் மரம் போல ஏதோ ஒன்று நீளமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உற்று நோக்கியபோது, அது சுமார் 110 கிலோ எடை மற்றும் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை என்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் எழுப்பிய அபாயக் குரலையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் திரண்டனர். குடியிருப்பு பகுதியில் முதலை பதுங்கியிருந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக சிதம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன், அந்த ராட்சத முதலையை மிகுந்த எச்சரிக்கையுடனும் லாவகமாகவும் கயிற்றால் கட்டிப் பிடித்தனர். பிடிபட்ட முதலை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
பழைய கொள்ளிடம் ஆற்றுப் படுகை மற்றும் நீர்நிலைகளில் இருந்து இந்த முதலை குடியிருப்புக்குள் நுழைந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 8 அடி நீள முதலை, சிதம்பரம் பகுதியில் முதலைகளின் முக்கிய வாழ்விடமாக விளங்கும் வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.
மழை மற்றும் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் பழைய கொள்ளிடம் கரையோரக் கிராம மக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் நள்ளிரவு நேரங்களில் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.