சென்னை,
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகள் கூண்டுக்கு அருகில் சென்று பார்வையிட பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், பூங்காவின் நீர்வாழ் பறவைகள் பகுதியில் அடுத்தடுத்து 7 பறவைகள் உயிரிழந்தன. பரிசோதனையில் அவற்றுக்கு 'H5N1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்ட பூங்காவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து அக்டோபர் 25-ம் தேதி முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பறவைகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பறவைகள் பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், சுற்றுலா பயணிகள் பறவைகளை தொலைவில் இருந்து மட்டுமே பார்த்து ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கால்நடை மருத்துவ குழுவினர் பறவைகளின் உடல்நிலையை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.