குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 12-ம் நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
குலேசகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்காரம் கடந்த 20-ந் தேதி நள்ளிரவு நடந்தது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் முத்தாரம்மன் சப்பரத்தில் குலசேகரன்பட்டினத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்,மாலையில் கோவில் வந்தடைந்த முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
விழாவில் 12-ம் நாளான நேற்று காலை 6 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷே கம், புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பல் வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரன் பட்டினத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் கனமழை பெய்தது. ஆனாலும், மழையில் நனைந்தவாறு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதில் விரதம் மேற்கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு களைந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.
மேலும், நேற்று காலை முதல் ஏராளமான கார், பஸ், வேன்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்ததால் திருச்செந்தூர்-குலசை கிழக்கு கடற்கரை சாலை யில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.