தமிழக செய்திகள்

ரங்கநாதன் தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம்... போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் கால விற்பனையை முன்னிட்டு ரங்கநாதன் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

150 போலீசார் பாதுகாப்புப் பணி!

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூட்ட நெரிசலைக் கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, ரங்கநாதன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருவதால் தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT