தமிழக செய்திகள்

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலாபயணிகள் கூட்டம்; கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஊட்டியில் தற்போது கோடை கால சுற்றுலா சீசன் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையை கழிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்காட்சியை ரசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டுக்கான 128-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி, வருகிற 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் 275 வகைகளை சேர்ந்த 10 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கி வருகின்றன. அவற்றை காட்சிமண்டபத்தில் அடுக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.பயணிகள் வசதிக்காக கோவையில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை மத்திய பஸ்நிலையம் மற்றும் கவுண்டம்பாளையத்தில் உள்ள புறநகர் பஸ்நிலையங்களில் இருந்து அரசு பஸ்கள் புறப்பட்டுச் செல்கின்றன. அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வருகிறது.கோவை பஸ்நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் வரிசையில் நின்று பஸ்களில் ஏறுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் வரிசையில் நின்று பஸ்களில் ஏறிச் சென்றனர்.இன்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்கள் வந்தவுடன் அவை உடனுக்குடன் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி புறப்பட்டுச் சென்றன. இனி வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.