வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 35), கூலி தொழிலாளி. இவரும் ஈஸ்வரி என்பவரும் 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் (10), நித்திஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் குடியாத்தம் செதுக்கரையை சேர்ந்த வேணி (30) என்பவர் தனது முதல் கணவரை பிரிந்து கடந்த 2019-ம் ஆண்டு சேட்டுவை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது குடியாத்தம் பிச்சனூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் சேட்டு, 2-வது மனைவி வேணி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
சூடு வைத்து சித்ரவதை
காலையில் வேலைக்காக வெளியூர் சென்று விட்டால் இரவு தான் சேட்டு வீடு திரும்புவார். பகல் நேரங்களில் சேட்டுவின் மகன்களை சித்தி வேணி கொடுமை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கரண்டி மற்றும் கத்தியை சூடு செய்து முதுகு, கை, கால் என பல இடங்களில் சித்தார்த் மற்றும் நித்திஷ்க்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இதில் அலறித்துடித்த அவர்களிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அண்ணன், தம்பி இருவரின் ஆண் உறுப்பிலும் சூடு வைத்துள்ளார். இதில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
மேலும் சித்தார்த் தலையில் பூரிகட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நித்தீஷ் வீட்டிலிருந்து செதுக்கரை பகுதியிலுள்ள பெரியம்மா மரியா மற்றும் நிஷாந்தியிடம் சென்று தன்னை சித்தி வேணி உடம்பில் சூடு வைத்ததை காட்டியுள்ளார். இதனை கண்ட அவர்கள் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து. சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.