தமிழக செய்திகள்

கடலூர்: பண்ருட்டி அருகே சோழர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு

நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் எடை கொண்டதாக இருந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் ற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

செப்பு நாணயம்

அப்பொழுது ஆற்றின் மேற்பரப்பில் செப்பு நாணயம் ஒன்றை கண்டெடுத்தனர். நாணயத்தை சுத்தம் செய்து பார்த்ததில் அது ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என தெரிய வந்தது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:-

“உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் பகுதி தென்பெண்ணையாற்றின் கரை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது ராஜராஜ சோழனின் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் எடை கொண்டதாக இருந்தது.

ராஜராஜ சோழன்

கண்டெடுத்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜராஜ" என பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. ஆகவே 985 முதல் 1014 வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என தெரிய வந்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன.

திரிசூலம் - விளக்கு

வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜ ராஜ" என எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் சங்க கால மன்னர்கள் மற்றும் அதன் பின் அரசாண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி மற்றும் பாலாறு போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளர்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT