சுங்கச்சாவடி 
தமிழக செய்திகள்

கடலூர்: சுங்கச்சாவடியில் நடந்து சென்றவர் தலையில் விழுந்த தடுப்பு கம்பி - வைரல் வீடியோ

இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

கடலூர்,

கடலூர் அருகே சுங்கச்சாவடியை நடந்து கடக்க முயன்ற நபர் மீது தானியங்கி தடுப்பு கம்பி திடீரென தலையில் விழுந்து தாக்கியதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

கொத்தட்டை சுங்கச்சாவடியில் விபத்து

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டை சுங்கச்சாவடி அமைந்துள்ளது. தினமும் இந்த சுங்கச் சாவடியை பல வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, நபர் ஒருவர் சுங்கச்சாவடி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, வாகனங்கள் செல்வதற்காக இயங்கும் தானியங்கி தடுப்பு கம்பி, எதிர்பாராதவிதமாக அந்த நபரின் தலையில் மிக வேகமாக வந்து இறங்கியது. இதில் பலத்த அடிபட்ட அவர், கண் இமைக்கும் நேரத்தில் நிலைகுலைந்து தார்ச்சாலையில் சுருண்டு விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும் சிசிடிவி காட்சி

இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT