சென்னை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த 5.7.2026 அன்று காலை பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த டாடா ஏஸ் வாகனம் பின்புறமாக மோதிய விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மனைவி சத்யா (வயது 31), சாமிநாதன் மனைவி செல்வராணி(58) மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி காந்திமதி(60), ராசாக்கண்ணு மகன் ரவிச்சந்திரன்(58) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.
இந்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உக்கரவேல் (வயது 48), சந்தோஷ்(37), தேவகி(50), அஞ்சலை(60), சதீஷ்(35), விஜயா(35), சந்திரகுமார்(35) ஆகிய 7 நபர்களுக்கும் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாவாசை(50) என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.