தமிழக செய்திகள்

சுங்க கட்டணம் உயர்வு: வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்மை செய்தியாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ரூ.10 முதல் ரூ.100 வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக வந்திருக்கும் செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே இருக்கின்றது. வளைகுடா போர் சூழலில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் பெற்றிருக்கின்றது. விலைவாசி உயர்வு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நுகர்வோர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு ஏற்கனவே எடுத்துச்சென்றுள்ளது.

இத்தருணத்தில் சுங்கக் கட்டண உயர்வு என அறிவித்திருப்பது மேலும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகப்படுத்தி, அது நுகர்வோர்களான பொதுமக்களின் மீதே சுமத்தப்படும் சுமையாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, மாற்று வழிகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடுவதோடு, அறிவித்துள்ள சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வணிகர்கள், நுகர்வோர்கள், பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கண்டனத்தை மிகவும் அழுத்தத்தோடு பதிவு செய்கின்றது.

உரிய தீர்வுகள் காணாவிடில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தனது நிலைப்பாட்டை எடுத்துச் செல்லும் நிலை உருவாகும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.