சென்னை,
அக்வான் புயல் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் வலுப்பெற்றது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாலை புயலாக வலுப் பெறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு 'அக்வான்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்கு பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும் தென் தமிழ கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை 'அக்வான்' புயலாகவும், 17ம் தேதி தீவிர புயலாகவும், 19ம் தேதி அதி தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக அந்தமான், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு 840 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.