சென்னை,
அக்வான் புயலின் காரணமாக சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன் தலைமையில், ராயபுரம் வடக்கு வட்டார அலுவலகத்தில் இன்று காணொலிக் காட்சியின் வாயிலாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்வான் புயலின் காரணமாக மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தலைமையில், இராயபுரம் வடக்கு வட்டார அலுவலகத்தில் காணொலிக் காட்சியின் வாயிலாக தொடர்புடைய சேவை துறைகளின் அலுவலர்களுடன் இன்று (16.11.2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வட்டார துணை ஆணையாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:-
மழைநீர் வெள்ளம் அதிகம் தேங்ககூடிய தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்கூட்டிய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள 69 நிவாரண மையத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்நிவாரண மையங்களில் படுக்கை வசதி, மின்சாரம், கழிடப்பிட வகதி மற்றும் குடிநீர் தயார் நிலையில் உள்ளது. இவர்களுக்கு உணவு தயாரித்து வழங்க 14 சமையற்கூடங்கள், மளிகைப்பொருட்களுடன் சமையல்காரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள், சுரங்க பாதை மற்றும் வெள்ள நீர் தேங்கும் இடங்களில் மழை நீரை வெளியேற்றுவதற்கு 50 எண்ணிக்கையில் 100 குதிரை திறன் கொண்ட பம்ப்கள் மற்றும் 160 எண்ணிக்கையில் பம்ப் பொருத்தப்பட்ட டிராக்டர் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
புயல் அல்லது மழை காரணமாக விழும் மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த சக்திமான் வாகனம், 10 லிப்ட் வாகனங்கள், 10 ஜே.சி.பி வாகனங்கள், 20 லாரிகள் 5 பாப்காட் மற்றும் 100 பணியாளர்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரம் பணியாற்ற சுழற்சி முறையில் பணிபுரிய பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
2,721 சமூக ஆர்வலர்களுக்கு அக்வான் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டு அவர்களின் உதவியினை பெறுவதற்கு நடவடவடிக்கை எடுக்கப்பட்டது. வெள்ளபாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வெள்ள நீரை தடுப்பதற்கு குடியுருப்பு பகுதிகளில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடைப்பட்ட இடங்களில் ஜென்செட்வுடன் கூடிய உயர்மட்ட மின்சார விளக்குகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அகற்றிடவும் கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெள்ளம் சூழும் இடங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல 30 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
தீயணைப்பு துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்கள் மாநகராட்சியின் அலுவலர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இணைந்து பணியாற்ற தயார்நிலையில் உள்ளனர். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.