தமிழக செய்திகள்

முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரெயில்களின் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

விரைவு ரெயில்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

அமராவதி,

முரசு புயல் எதிரொலியாக வடமாநிலங்கள் செல்லும் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

முரசு புயல்

நேற்று (02-11-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ("முரசு") (severe cyclonic storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03.11.2026) அதிகாலை 3.30 மணி முதல் காலை 5.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியத்திற்குள் வலுவிழந்து புயலாகவும் (cyclonic storm) மேலும் இன்று நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression) வலுவிழக்கக்கூடும் என்றும், வலுவிழந்து சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதனிடையே முரசு கரையை கடந்தபோது, ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. ஆந்திராவின் பல பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்நிலையில் முரசு புயல் எதிரொலியாக வடமாநிலங்கள் செல்லும் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவு ரெயில்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

12 மணி நேரமாக

முரசு புயலின் தாக்கம் எதிரொலியாக 29 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் ரெயில் 12 மணி நேரமாக நடுவழியில் நிற்கிறது. நள்ளிரவு 1.46 முதல் சிராலா - ஓங்கோல் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். காலை 8 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய சார்மினார் ரெயில் 12 மணி நேரமாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ரெயில்கள் ரத்து

இந்நிலையில் முரசு புயலின் தாக்கத்தால் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் நெல்லூர் - ஓங்கோல் இடையே முரசு புயல் கரையைக் கடந்த நிலையில் தற்போது விஜயவாடா அருகே மையம் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT