தமிழக செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ‘முரசு’ புயல் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ந்தேதி உருவானது. இந்த புயல் ஆந்திராவை யொட்டிய பகுதிகளில் கரையை கடந்து சூறாவளி காற்று, மழையை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் 2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய நிகோபர் தீவுகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது.

இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக இன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இந்தியாதான் பரிந்துரைத்து இருக்கிறது.

தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் 3-ம் தேதி அன்று நெல்லூர்-நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT