தமிழக செய்திகள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி-மாண்டி சாலைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டல்

மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவிற்கு “திருச்சி லோகநாதன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி லோகநாதன் தெரு:--

தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகரும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி அடக்குமுறைக்கு ஆளான தேசபக்தரும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கலைவாணர் என்.எஸ்.கே. ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டரும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், பேரறிஞர் அண்ணா அவர்களால் இசைத்தென்றல் பட்டமும் பெற்றவரும், இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியவருமான திருச்சி லோகநாதனின் கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவிற்கு “திருச்சி லோகநாதன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சீர்காழி கோவிந்தராஜன் சாலை:-

தமிழ் மரபு இசை மற்றும் திரை இசை தழைத்தெழச் செய்த முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த வெண்கலக்குரல் வளமிக்க தமிழ்ப் பாடகர் சங்கீத சேவகர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவாக அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு “சீர்காழி கோவிந்தராஜன் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எம்.எஸ். விஸ்வநாதன் சாலை:-

கடந்த 70 ஆண்டுகளாக தென்னிந்திய மக்களைக் குறிப்பாகத் தமிழ் மக்களை தனது இன்னிசையால், மெல்லிசையால் மகிழ்வித்து, தமிழ் மக்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு அணி செய்யும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் விருப்பத்தின் பேரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்து, 1970-லிருந்து இன்றும் அரசு மற்றும் கல்வி சாலைகளில் தமிழ்த்தாய் வாழ்த்தினை முழங்க செய்தவரும், ஆறு முதல்வர்களுடன் பணிபுரிந்த பெருமைக்குரியவருமான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.