கோவை,
குடிபோதையில் தினமும் தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்று விட்டு நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே ஆலாந்துறையை அடுத்த பூலுவப்பட்டி மெட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி (36). இவர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 1-ந் தேதி ஆறுச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது குடிபோதையில் தனது கணவர் ஆறுச்சாமி, கீழே விழுந்ததில் டைல்ஸ் குத்தியதால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் போலீசார் மர்மச் சாவு என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஆறுச்சாமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று போலீசாருக்கு அளிக்கப்பட்டது. அதில், ஆறுச்சாமியின் மார்பில் பலமான காயங்கள் இருந்ததும், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியது போன்ற காயங்கள் இருப்பதால் கொலையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் போலீசார் ஆறுச்சாமியின் மனைவி ரேவதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், ஆறுச்சாமியை கொலை செய்ததை ரேவதி ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
ஆறுச்சாமி தினமும் மது குடித்து ரேவதியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத் தன்றும் அவர் ரேவதியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஆறுச்சாமியின் மார்பில் பலமாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் பதற்றம் அடைந்து கொலையை மறைக்க முடிவு செய்து, டைல்ஸ் கல் குத்தி தனது கணவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடி உள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆறுச்சாமி கொலையானது தெரிய வந்ததால் ரேவதி மாட்டிக்கொண்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கணவரை கொலை செய்து விட்டு அதை மறைக்க நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.