திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (60) கூலி வேலை செய்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, சூரியகுப்பம் கிராமம் அருகே சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சென்ற போது நிலைதடுமாறி வாகனத்துடன் கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் முழுவதும் தண்ணீர் இருந்ததால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவலறிந்து வந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது, இருசக்கர வாகனம் மட்டும் மீட்கப்பட்டது. பின்னர் செய்யாறிலிருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு மோட்டார்கள் மூலம் கிணற்றிலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சுமார் 8 மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு முருகேசனின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.