கொள்ளையடிக்கப்பட்ட முருகனின் வீட்டில் போலீசார் ஆய்வு செய்த காட்சி 
தமிழக செய்திகள்

பூட்டிய வீட்டில் துணிகரக் கொள்ளை: 45 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்துள்ள இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில், பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூர் சென்ற உரிமையாளர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். திருமண மண்டப உரிமையாளரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனால் இவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

பூட்டை உடைத்து துணிகரம்

முருகன் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவைத் திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்

வெளியூர் சென்றிருந்த முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (சனிக்கிழமை) வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது நகைகளும், பணமும் திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

கொள்ளைச் சம்பவம் நடந்த துல்லியமான தேதி மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்துள்ள இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT