திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடைக்கு இன்று வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது கடைக்குள் நுழைந்த லோகேஷ் என்ற வாலிபர், சில பொருட்களை வாங்குவது போல நடித்தார்.
பின்னர் பில் போடும் இடத்திற்கு வந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த ஊழியர்களை நோக்கி நீட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களை மிரட்டி, கவுண்டரில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அவர் தப்பியோடினார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் போலீசார், சூப்பர் மார்க்கெட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், தலைமறைவாக இருந்த குற்றவாளி லோகேஷை, சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் எடுத்த இந்த விரைவான நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.