தமிழக செய்திகள்

சூரசம்ஹார கூட்ட நெரிசலில் துணிகரம்... உதவிசெய்வது போல் நடித்து 10 பவுன் நகை அபேஸ்!

திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்போரூர்,

திருப்போரூர் முருகன் கோவில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை 'அபேஸ்' செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணுக்கு திடீர் மயக்கம்

சென்னை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், செங்கல்பட்டை சேர்ந்த ஸ்ரீரங்கா (வயது 55) என்ற பெண் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

10 பவுன் தங்க நகை அபேஸ்

இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள்,அவருக்கு உதவி செய்வது போல் நடித்து, அவர் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை நைசாக அபேஸ்' செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீரங்கா, இதுகுறித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் விழாவிற்கு வந்த மற்றொரு நபரின் செல்போனும் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்களின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருப்போரூர் முருகன் கோவிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை மற்றும் செல்போன் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT