தமிழக செய்திகள்

எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்த மகள்... மனவேதனையில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

காதல் விவகாரம் சோனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

கோபி,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகர்பாளையம் சக்தி கார்டனை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (வயது 45). இவர் அச்சக டிசைனராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி சந்திரா (40). அத்தாணி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக இருந்தார். இவர்களுக்கு சோனா என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

இதில் சோனா கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த தாமோதரன் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தாமோதரனுக்கும், சோனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் சோனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

மகளின் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் தாங்கள் தற்கொலை செய்து கொள் வதாக மிரட்டி வந்துள்ளனர். ஆனால் சோனா காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்து வந்தார். நேற்று காலை தாமோதரன் சோனா வீட்டுக்கு வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்காக சோனாவை அங்கிருந்து அழைத்து சென்றார்.

தங்கள் கண் முன்னே மகள் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதால் மாதேஷ்வரனும், சந்திராவும் மனமுடைந்தனர். இதனால் "இனி வாழ்வதை விட சாவதே மேல்” என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து 2 பேரும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.