தமிழக செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை: அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி போலீசில் சரண்

இனிமேல் என் வீட்டிற்கு வராதீங்க அண்ணா வந்தால் பிரச்சினை ஏற்படும் என்று எச்சரித்து அண்ணனை அனுப்பியுள்ளார்.

திருவள்ளூர்,

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 58). இவர் தனது தம்பி பாலசுப்பிரமணியன் ( வயது 48) மற்றும் தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். சங்கரின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பியின் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாலசுப்பிரமணியனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சங்கர் தனது தம்பியின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இது குறித்து அண்ணனிடம் பாலசுப்பிரமணியன் கேள்வி எழுப்பவில்லை. இதனால், பாலசுப்பிரமணியனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதையடுத்து அண்ணன் சங்கரை கோயம்பேடு அருகே உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் பாலசுப்பிரமணியன் சேர்த்தார். ஆனால், விடுதியில் இருந்த சங்கர் திடீர் திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பாலசுப்பிரமணியன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பகையாக மாறியது. பின்னர், சங்கரை அவரது சொந்த ஊரான திண்டிவனம் அருகே உள்ள முருங்கை கிராமத்திற்கு பாலசுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அத்திப்பட்டு பகுதிக்கு சங்கர் வந்தார். தனது தம்பி வீட்டிற்கு சென்று அவரது மகளிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் இனிமேல் என் வீட்டிற்கு வராதீங்க அண்ணா வந்தால் பிரச்சினை ஏற்படும் என்று எச்சரித்து சங்கரை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சங்கர் மீண்டும் வந்துள்ளார். இதனால், கோபமடைந்த பாலசுப்பிரமணியன் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து சங்கரை வயிறு, மார்பு, கழுத்து போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அங்கிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று பாலசுப்பிரமணியன் போலீசில் சரணடைந்துள்ளார். இதையடுத்து கொலை நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், சங்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT