தமிழக செய்திகள்

இடைக்கால ஊதியத்தில் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: தமிழக அரசு உத்தரவு

பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ, அவர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 6-வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து. இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாத குடும்ப ஊதியத்துக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை ஊதியம்

ஆனால், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், இடைக்கால அடிப்படையில் அவர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிக மாக இருந்தால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாத நிலையில், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி 262 சதவீதம் வழங்கப்படும்.

இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அனைத்து ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிகள், கருவூலங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.