தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கரகூரை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 30). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் ஜவளகிரி-பாலதொட்டனப்பள்ளி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பச்சையப்பன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பச்சையப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிரைவர்
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (33). சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் சூளகிரி அருகே ஒட்டையனூர் பக்கமாக சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது சரக்கு வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டு இருந்த போதுஅந்த வழியாக வந்த லாரி சரக்கு வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.