தமிழக செய்திகள்

மானாமதுரையில் கைதி மரணம்: சிபிஐ விசாரணை வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குடிமகனின் உயிர் இவ்வாறு இழக்கப்படுவது சமூகத்தில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாகும்.

ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவரது உயிர் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை பொறுப்பாகும். ஆகையால் இந்த சம்பவத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வருவது மிகவும் அவசியமானதாகும்.

உண்மை நிலை குறித்து எந்தவித சந்தேகமும் இல்லாத வகையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேலும், சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்தினருக்கு நீதியும் நியாயமும் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.