தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்.. என்ன நடந்தது..? மாவட்ட காவல்துறை பரபரப்பு விளக்கம்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கைதி அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாசலம் என்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதி அருணாச்சலம்

விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணை கைதி அருணாச்சலம் மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

120 மதுபான பாட்டில்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காயங்கள் இல்லை

கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டன. அவரது உடல் சோதனையானது, காணொளி பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.

தானாகவே மயங்கி விழுந்தார்

சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார்.

இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, குடிநீர் வழங்கி, பாதுகாப்பாக அமர வைத்தனர். காவல் நிலைய வரவேற்பு பகுதியிலிருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டார்.

சட்டப்படி விசாரணை

அதன்பின்னர், அவரது உடல்நிலை இயல்பாக இருந்ததால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின்னர், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், 23.07.2026 அன்று அவர் இறந்ததாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வெளியீடு

இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி இரவு 8.38க்கு காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டது.