சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10-ம் தேதி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மாணவிக்கு கொடூரம் இழைக்கப்பட்ட 76-ம் நாளில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பளித்த நீதிபதியும், சரியான வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களும், புலனாய்வு செய்த காவல்துறையினரும் பாராட்டுக்கு உரியவர்கள். இந்தத் தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்வதை அரசும், காவல்துறையும் சாத்தியமாக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த அளவுக்கு விரைவாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் தடுக்கப்படும்.
இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனாலும், விளாத்திகுளம் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைப் பார்க்கும் போது இத்தகைய அரிதிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதை பாமக ஆதரிக்கிறது.
விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வழங்கப்பட்டிருப்பது நடந்த பாவச் செயலுக்கான பரிகாரம் மட்டும்தான். மற்றபடி திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவுக்கு தலைவிரித்தாடின என்பதற்கான மோசமான எடுத்துக்காட்டாக விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு வரலாற்றில் பதிவாகியிருக்கும்.
பெண்களும், குழந்தைகளும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.