சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டு இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.