தமிழக செய்திகள்

சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்: 3 துறைகள் மீது நடக்கிறது

துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட இருக்கின்றனர்.

சென்னை,

சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. முதல் நாளில் 3 துறைகள் மீது நடக்கிறது.

பட்ஜெட் கூட்டத் தொடர்

தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 12-ந் தேதி இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பேசினார்கள். அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதல் நாளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.