தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம்

கடந்த 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சென்னை,

சட்டசபையில் இன்று 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் துறையும் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட்ஜெட் மீதான விவாதம்

தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது.

மானியக் கோரிக்கை விவாதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், கடந்த 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்கள் (22, 23-ந் தேதி) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

முதல்-அமைச்சர் விஜய்யின் துறை

இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித் தறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.